செய்திகள்
நாங்குநேரியில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
நாங்குநேரியில் நேற்று நள்ளிரவில் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
களக்காடு:
நாங்குநேரி பைபாஸ் ரோட்டில் குத்துப்பிறை இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு பூஜைகள் அனைத்தும் முடிந்ததும் பூசாரி வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.
அவர் இன்று காலை மீண்டும் கோவிலுக்குவந்தார். அப்போது கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் கோவில் கதவும் உடைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நாங்குநேரி பைபாஸ் சாலையில் இந்த கோவில் இருப்பதால், கோவிலுக்கு வழக்கமாக வரும் பக்தர்கள் மட்டுமின்றி அந்த வழியாக செல்பவர்களும் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வார்கள். இதனால் உண்டியலில் அதிக பணம் இருந்திருக்கும் என கூறப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.