ஒத்தக்கடை அருகே பெண் கொலையில் உறவினர் கைது
மேலூர்:
மதுரை திருமோகூர் பகுதியில் வசிப்பவர் முருகன். இவரது மனைவி கவுசல்யா (வயது22). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியில் தனியார் நிறுவனத்தில் முருகன் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று அவர் வேலைக்கு சென்ற நிலையில் இரவில் கவுசல்யா வீட்டில் தனியாக இருந்தார். மறுநாள் காலையில் வீட்டு கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது அங்கு கவுசல்யா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது.
பூட்டிய வீட்டுக்குள் கவுசல்யா கொலை செய்யப்பட்டு கிடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கவுசல்யா கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியும் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். கொலையாளியை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்தும் அவர் உத்தர விட்டார்.
இந்த வழக்கில் தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் கவுசல்யாவின் உறவினர் விஜயகுமார் (43) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை அழைத்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனை தொடர்ந்து போலீசாரை விஜயகுமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக கவுசல்யாவை கொலை செய்ததையும், அவரது கழுத்தில் கிடந்த நகையை திருடியதையும் ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து விஜயகுமாரை கைது செய்து மேலூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.