செய்திகள்
பாளை அருகே கோவில் கொடை விழாவில் மோதல்: வாலிபர்களை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது
பாளை அருகே கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட மோதலில் வாலிபர்களை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பாளை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த சொக்கலிங்கபுரத்தில் ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான கோவில் கொடை விழா நடந்தது. விழாவையொட்டி மேளதாளம் முழங்க புனித நீர் எடுத்து வரப்பட்டது. அப்போது சில இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வந்து கொண்டு இருந்தனர்.
மற்றொரு தரப்பினர் வசிக்கும் தெருவிலும் அவர்கள் ஆடிப்பாடி வந்து கொண்டு இருந்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அங்கு மேலசெவல் இந்திரஜித் (வயது 20), களக்காடு செல்வம் (22) ஆகியோர் அங்கு நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இவர்களிடம் தகராறு செய்துவிட்டு அரிவாளால் அவர்களை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் காயம் அடைந்த 2 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தையொட்டி சொக்கலிங்கபுரம், மேலசெவல் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மேலச்செவலை சேர்ந்த சிவா (21), மற்றொரு சிவா (22), ராஜ்குமார்(21) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.