செய்திகள் (Tamil News)
போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது எடுத்தப்படம்.

தமிழக -கேரள எல்லைகளில் போலீசார் வாகன சோதனை - போதை பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை

Published On 2019-09-10 05:45 GMT   |   Update On 2019-09-10 05:45 GMT
ஓணம் பண்டிகை முன்னிட்டு போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க தமிழக கேரள மாநில எல்லைகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்,:

கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விளையும் காய்கறிகள் பெரும்பாலும் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதுபோல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக கேரள மாநிலத்திற்கு அனுப்பப்படுகின்றன. தேனி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு உணவுப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாகவும் ஓணம் பண்டிகையை பயன்படுத்தி இந்த கடத்தல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து கடத்தல் சம்பவங்களை தடுக்க தேனி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லை பகுதிகளில் உள்ள குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் வாகனச் சோதனை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்திரவிட்டுள்ளார். இதையெடுத்து இந்தப் பகுதிகளில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் வாகனச் சோதனை நடத்தி வருகின்றனர்.

உணவுப்பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்றும் மதுபானங்கள் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் மறைத்து எடுத்துப் செல்லப்படுகிறதா? என்றும் அனைத்து வாகனங்களிலும் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்கப்படுகின்றன. 

Similar News