செய்திகள் (Tamil News)
கொரோனா வைரஸ்

மகாராஷ்டிராவில் இருந்து காரில் கரூர் வந்தவருக்கு கொரோனா

Published On 2020-05-06 10:54 GMT   |   Update On 2020-05-06 10:54 GMT
மகாராஷ்டிராவில் இருந்து சொந்த ஊரான கரூர் பள்ளப்பட்டிக்கு வந்தவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவரது தொடர்பில் இருந்த 16 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் 42 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். பின்னர் அவர்களுக்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் வீடு திரும்பினர். சில தினங்களுக்கு முன்பு சென்னை ராயபுரத்தில் இருந்து கரூர் வந்த 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் ஒருவருக்கு தொற்று உறுதியானது. அதன் பின்னர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தனது சொந்த ஊரான கிருஷ்ணராயபுரம் சித்தலவாய் கிராமத்திற்கு லாரியில் திரும்பிய இன்னொரு வாலிபருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஊருக்குள் வருவதற்கு முன்பு மருத்துவத்துறையினர் மணவாசி டோல்கேட்டில் மடக்கி மருத்துவ பரிசோதனை செய்ததால் அவரால் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி மகாராஷ்டிராவில் இருந்து சொந்த ஊரான கரூர் பள்ளப்பட்டிக்கு 47 வயது மதிக்கத்தக்க ஒருவர் திரும்பினார். தகவலறிந்த சுகாதாரத்துறையினர் 4-ந்தேதி அவரை வீட்டில் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்தனர். அதன் முடிவில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து கரூர் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தது. மகாராஷ்டிராவில் இருந்து திரும்பியவருடன் 6 பேர் காரில் பயணம் செய்தனர். அவர்களில் 2 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டனர். அதன் முடிவுகள் இன்று வரும். காரில்வந்தவர்களில் விடுபட்ட 4 பேர், குடும்ப உறுப்பினர்கள் 3 பேர், உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 16 பேர் அடையாளம் காணப்பட்டு வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக கரூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செல்வகுமார் தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் பள்ளப்பட்டியில்தான் அதிகபட்சமாக 20 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் அங்கு ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 5 பேர் வீடு திரும்பினர். தற்போதைய நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த 11 பேர், நாமக்கல்லை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 20 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Similar News