செய்திகள் (Tamil News)
வேளாண் மசோதா நகலை போராட்டக்காரர்கள் கிழிக்க முயன்றபோது அதனை துணை போலீஸ் சூப்பிரண்டு பறித்த காட்சி

மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Published On 2020-09-25 10:17 GMT   |   Update On 2020-09-25 10:17 GMT
மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி(எஸ்.டி.பி.ஐ) சார்பில், மத்திய அரசின் விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்ட மசோதாக்களை ரத்து செய்யக்கோரி சட்ட நகலை கிழித்தெரியும் போராட்டம் புதுக்கோட்டை பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு அக் கட்சியின் நகர தலைவர் முகமது அலி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் காசிநாத துரை, மாவட்ட செயலாளர் ஜகுபர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி பஸ் நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்திற்கு திருமயம் தொகுதி செயலாளர் இஸ்மாயில் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எம்.தாஹா, தொகுதி துணை தலைவர் முகமது மைதீன், நகர தலைவர் ஷேக் முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டு சட்ட நகல் கிழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக் கண்ணன், இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் போராட்டக்காரர்கள் கையிலிருந்த சட்ட நகலை கிழிக்க விடாமல் பறித்து சென்றனர்.

கந்தர்வகோட்டை பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு அப்துல் மஜீத் தலைமை தாங்கினார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா யூனியன் செயலாளர் ஆஷிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மணமேல்குடியை அடுத்த அம்மாபட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கிளைத் தலைவர் கமருதீன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீமிசல் தபால் நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்திற்கு கிளைத் தலைவர் ஹனிபா தலைமை தாங்கினார்.

இதில், கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் சாலிஹ் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசினார்.

Similar News