செய்திகள்
தியாகதுருகம் அருகே 40 பேருக்கு திடீர் வாந்தி-மயக்கம்
தியாகதுருகம் அருகே 40 பேருக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதற்கு சுகாதாரமற்ற குடிநீர் காரணமா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கண்டாச்சிமங்கலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் திம்மலை காலனி பகுதியை சேர்ந்த கண்ணன்(வயது 65) என்பவருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இவரை தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் கோவிந்தராசு(36), தனசேகரன் மனைவி சசிகலா(28), ரவி மனைவி சங்கீதா(20) உள்பட பலருக்கும் வாந்தி-மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனே இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் கிராம மக்கள் பீதியடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து தியாகதுருகம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் அருண்குமார், மணிகண்டன், சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், ஜெயச்சந்திரன், கிராம சுகாதார செவிலியர் சரஸ்வதி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் திம்மலை கிராமத்துக்கு விரைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
மேலும் சுகாதாரத் துறையினர் வீடு, வீடாக சென்று குடிநீரில் கழிவுநீர் ஏதேனும் கலந்துள்ளதா? மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முறையாக அவ்வப்போது கழுவப் படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். இது தவிர அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் மாதிரி எடுத்து அதில் பாக்டீரியா ஏதேனும் கலந்துள்ளதா? என்பதை அறிய கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதையொட்டி கிராம மக்களிடம் காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும், தண்ணீர் பரிசோதனை முடிவு வரும் வரை ஆழ்துளைக் கிணற்று தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் எனவும் சுகதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.
முகாமில் 4 குழந்தைகள் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 6 பேர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களில் 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் திம்மலை கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.