செய்திகள் (Tamil News)
போலீசாரால் கைது செய்யப்பட்ட பிரேம் மற்றும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.

திருப்பதியில் இருந்து கேரளாவிற்கு பஸ்சில் 8½ கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

Published On 2021-03-05 02:32 GMT   |   Update On 2021-03-05 02:32 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை தடுக்க மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம்:

திருப்பதியில் இருந்து கேரளாவிற்கு அரசு பஸ்சில் 8½ கிலோ கஞ்சா கடத்தியவர், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் சிக்கினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணமோ அல்லது பரிசு பொருட்களையோ வாகனங்களில் கொண்டு செல்வதை தடுக்க மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெய்சன், போலீஸ் ஏட்டுகள் ராமமூர்த்தி, நெடுமாறன், சுந்தர் ஆகியோர் அடங்கிய குழுவினர் விழுப்புரம் அருகே பூத்தமேட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திருப்பதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ்சை பறக்கும் படை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். இதில் ஒரு பையில் 2 பார்சல்கள் இருந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது 8½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த நபரை பஸ்சில் இருந்து கீழே இறக்கி அவரிடம் தீவிர விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புன்னவிலாவீடு பகுதியை சேர்ந்த ஹசன் மகன் பிரேம் (வயது 42) என்பது தெரிந்தது. மேலும் விசாரணையில் அவர், இந்த கஞ்சா பொட்டலங்களை திருப்பதியில் இருந்து வாங்கிக்கொண்டு அங்கிருந்து விழுப்புரம் வழியாக பஸ்சில் வந்து பின்னர் விழுப்புரத்தில் இருந்து கேரளாவிற்கு வேறொரு பஸ் மூலமாக கடத்திச்செல்ல முயன்றதும், இந்த கஞ்சாவை கேரளாவிற்கு கொண்டு சென்று வாங்கிய விலையில் இருந்து இருமடங்கு விலையாக கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பிடிபட்ட பிரேமையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, பிரேமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கடத்தலில் வேறு யார், யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்று விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News