செய்திகள்
கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசனுக்கு கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Published On 2021-03-20 07:53 GMT   |   Update On 2021-03-20 07:53 GMT
நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த சில நாட்களாகவே கோவையில் தங்கி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
சூலூர்:

நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமா படப்பிடிப்பின் போது காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக ஆபரே‌ஷன் மூலம் காலில் பிளேட் பொருத்தியிருந்தார்.

அந்த பிளேட்டை சமீபத்தில் அகற்றி விட்டு சிறிது நாட்கள் வீட்டில் இருந்து ஒய்வெடுத்து வந்தார். கட்சி பணிகளை வீட்டில் இருந்தவாறே மேற்கொண்டார்.

தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த சில நாட்களாகவே கோவையில் தங்கி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று காலை கோவை காந்தி பார்க் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவரை பார்க்க ஏராளமானோர் அங்கு திரண்டனர். அந்த கூட்டத்தில் யாரோ ஒருவர் அவரது காலில் மிதித்து விட்டதாக தெரிகிறது.

இந்த காலில் தான் ஆபரே‌ஷன் செய்திருந்தார். இதனால் திடீரென அவருக்கு வலி ஏற்பட்டது. வலி அதிகமானதை அடுத்து கமல்ஹாசன் உடனடியாக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த டாக்டர் சிறிது நேரம் ஒய்வெடுத்து கொள்ளுங்கள். வலி சரியாகிவிடும் என்று கூறினர். இதையடுத்து கமல் தான் தங்கியுள்ள ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுத்து வருகிறார்.

முன்னதாக இன்று காலை 11 மணியளவில் சூலூர் மற்றும் பல்லடத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று காலை முதலே சூலூர் நால்ரோட்டில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் அவரது பேச்சை கேட்க குவிந்திருந்தனர். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சூலூர், பல்லடம் பிரசாரத்தை கமல்ஹாசன் ரத்து செய்தார். இந்த அறிவிப்பு அங்கு திரண்டிருந்த நிர்வாகிகளிடம் ஒலி பெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Similar News