செய்திகள் (Tamil News)
கோப்புபடம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2 வாரத்தில் 14 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர்

Published On 2021-06-30 10:22 GMT   |   Update On 2021-06-30 11:35 GMT
தனியார் பள்ளியில் படித்த குழந்தைகளை வருவாய் இழப்பு காரணமாக பெற்றோர்கள் அரசு, மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.

சென்னை:

கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 14-ந் தேதி தொடங்கியது.

பெருந்தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதித்ததால் இந்த ஆண்டும் அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் சேர்ந்து வருகிறார்கள்.

சென்னையில் மாநகராட்சி பள்ளிகளில் 2 வாரத்தில் 14 ஆயிரத்து 161 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். இதில் 9 ஆயிரம் மாணவர்கள் மாநகராட்சி அல்லாத பள்ளிகளில் (தனியார் உட்பட) படித்தவர்கள். அவர்கள் அங்கிருந்து விலகி மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்தனர்.

5 ஆயிரத்து 126 பேர் மற்ற மாநகராட்சி பள்ளிகளில் இருந்து சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு 28 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இதில் 14 ஆயிரத்து 763 பேர் மாநகராட்சி அல்லாத பள்ளியில் படித்தவர்கள்.

ஒரு சில மாநகராட்சி பள்ளிகளில் இடங்கள் நிரம்பி விட்டன. எருக்கஞ்சேரி, தானா தெரு, ஜோன்ஸ்ரோடு ஆகிய இடங்களில் செயல்படும் மாநகராட்சி பள்ளிகளில் பெரும்பாலும் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது.

தனியார் பள்ளியில் படித்த குழந்தைகளை வருவாய் இழப்பு காரணமாக பெற்றோர்கள் அரசு, மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள். இதனால் பெற்றோருக்கு கல்வி செலவு முழுமையாக குறைந்துள்ளது.

மாநகராட்சி பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்காக 50 ரூபாய் பதிவு கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. வேறு எந்த கட்டணமும் பெறப்படவில்லை. அனைத்து பாடப்புத்தகம், சீருடை, உணவு, காலணி, பேக் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வித்துறை தீவிரப்படுத்தி உள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு செய்து மாணவர்களை அரசு, மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு, மாநகராட்சி பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி சலுகைகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள வசதிகள் பற்றியும் பெற்றோருக்கு விளக்கப்படுகிறது.

ஜூலை மாதம் முதல் ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கைக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவு றுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் வரை மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று கல்வி அதிகாரி தெரிவித்தார். 

Similar News