செய்திகள் (Tamil News)
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

4-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடக்கும் தேதியை அறிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2021-10-01 08:49 GMT   |   Update On 2021-10-01 08:49 GMT
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை:

கொரோனாவை கட்டுப்படுத்த அதிவிரைவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதுவரை 3 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் போதிய தடுப்பூசி வந்து சேராததால் 4-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த சாத்தியமில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 4-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட 3 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது. கடந்த மாதம் மட்டும் 1 கோடியே 42 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்கள்.

தற்போது 24 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே 4-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படும். வழக்கம்போலவே 20-க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள் நடைபெறும். கடந்த முறை நடத்தப்பட்ட முகாமில் 2-வது தவணை தடுப்பூசியை 10 லட்சம் பேர் போட்டுக்கொண்டனர்.


தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு மற்றும் ஆர்வம் காரணமாக கூடுதலான தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

அடுத்த மாதம் 1 கோடியே 23 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

இந்த மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வாரம். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் மற்றும் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் மார்பக புற்றுநோய் பரிசோதனை நடத்தப்படும்.

புற்று நோயை உற்று நோக்கி வருகிறோம். ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்...கோயம்பேடு மேம்பாலம் 10 நாளில் திறக்கப்படும் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்

Similar News