செய்திகள்
கைது

அனுமதியின்றி வீட்டில் பட்டாசு பதுக்கிய வாலிபர் கைது

Published On 2021-11-02 05:01 GMT   |   Update On 2021-11-02 05:01 GMT
உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் மக்கள் பட்டாசு வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு சிலர் அனுமதியின்றி பட்டாசுகளை அதிக அளவில் வாங்கி அதை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்று பட்டாசு பதுக்கி வைக்கும் போது சில சமயங்களில் எதிர்பாராதவிதமாக விபத்தும் ஏற்படுகிறது. இதனால் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரச்சலூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் அரச்ச லூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அரச்சலூர் ரவுண்டானா அருகே உள்ள கொங்கு நகரில் ஒரு வீட்டில் பட்டாசு பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கொங்கு நகரில் உள்ள வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (வயது 45) என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் சிவகாசியிலிருந்து பட்டாசுகளை உரிய அனுமதியின்றி வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News