செய்திகள்
அபராதம்

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்- 4 பஸ்களுக்கு அபராதம்

Published On 2021-11-02 09:30 GMT   |   Update On 2021-11-02 09:30 GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளை மீறிய 4 பஸ்களுக்கு அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் நேற்று முதல் இயங்கத் தொடங்கியது. இதே போல் ஆம்னி பஸ்களும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆம்னி பஸ்களில் பண்டிகை காலங்களில் இயக்கப்படும் சமயத்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி ஒரு சில பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலை கொடைரோடு சுங்கச்சாவடியில் மதுரை இணைப்போக்குவரத்து ஆணையர் பொன்செந்தில்நாதன் உத்தரவின்பேரில் தேனி ஆர்.டி.ஓ செல்வக்குமார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள் மதுரை, நெல்லை மார்க்கமாகவும் மற்றும் சென்னை, கோவை மார்க்கமாகவும் செல்லும் தீபாவளி சிறப்பு ஆம்னி பஸ்களில் விடிய விடிய தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் தீபாவளி சிறப்பு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? அல்லது முறைக்கேடாக அதிகப்பயணிகளை ஏற்றி செல்கின்றனரா? சிறப்பு பஸ்களின் வாகன உரிமை, இன்சூரன்ஸ் மற்றும் முறையாக அரசுக்கு வரி செலுத்தியுள்ளனரா? என்பது குறித்தும் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:- இந்த ஆய்வானது 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை தினமும் நடைபெறும். அனைத்து ஆம்னி பஸ்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும். தமிழக அரசு உத்தரவை மீறும் ஆம்னி பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆய்வில் ஆம்னி பஸ்களில் தணிக்கை அறிக்கை மூலமாக ரூ.2500 வீதம் 4 பேருந்துக்கு அபதாரம் விதிக்கப்பட்டது.

மேலும் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்றனர். இந்த ஆய்வில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாதன் மற்றும் மோட்டார் வாகன அலுவலக பணியாளர்கள் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News