செய்திகள்
மல்லி

கோவையில் பூக்கள் விலை உயர்வு: மல்லி ரூ.1000-த்திற்கு விற்பனை

Published On 2021-11-02 10:44 GMT   |   Update On 2021-11-02 10:44 GMT
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் மார்க்கெட்டிற்கு வரும் பூக்கள் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
கோவை:

கோவை பூ மார்க்கெட்டுக்கு கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விழாக்காலங்களில் மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை ஜோராக இருக்கும். நவராத்திரி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைக்கு அதிகளவில் பூக்கள் விற்பனையாகின. அதன்பின்னர் விற்பனை சற்று குறைந்தது. அதேபோல் பூக்கள் விலையும் வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் புத்தாடைகள், இனிப்பு வகைகள் வாங்கி வருகின்றனர். இதுதவிர வீட்டில் சாமி கும்பிடுவதற்காக பூக்கள், பழங்களும் வாங்க தயாராகி வருகிறார்கள்.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் மார்க்கெட்டிற்கு வரும் பூக்கள் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு கோவை பூ மார்க்கெட்டில் ரூ.40க்கு விற்பனையான செவ்வந்தி இன்று ரூ. 50-க்கும், ரூ.180-க்கு விற்பனையான அரளிப்பூ ரூ.240-க்கும் விற்பனையானது. இதேபோல் 100 ரூபாய்க்கு விற்பனையான ரோஜாபூ ரூ.240க்கும் விற்பனையானது.

கோவை பூமார்க்கெட்டில் விற்பனையாகும் பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

செவ்வந்தி ரூ.50, ரோஜா-ரூ.240, சம்பங்கி-ரூ.60, மல்லி-ரூ.1000, முல்லை-ரூ.800, கோழி கொண்டை-ரூ.80, அரளி-ரூ.240, தாமரை-ரூ.20, துளசி-ரூ.30, செண்டுமல்லி-ரூ.80, வைலட் செவ்வந்தி-ரூ.120க்கு விற்பனையானது.
Tags:    

Similar News