செய்திகள்
ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை - ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

Published On 2021-11-08 07:09 GMT   |   Update On 2021-11-08 07:09 GMT
ராமேசுவரம் கடலோர பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் மழை நீரால் ஏற்படும் பாதிப்பில் பாதுகாத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வுகளையும் செயல்முறைகளையும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

ராமேசுவரம்:

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மையத்தால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

ராமேசுவரம், மண்டபம், பாம்பன் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. எனவே மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம் மின்துறை அதிகாரிகள் தமிழக அரசின் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதித்துள்ளனர். இதனால் மீன்பிடி டோக்கன் இன்று வழங்கப்படவில்லை.

மேலும் படகுகளை கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தவும் மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் கரையில் ஓய்வெடுத்தன.

ராமேசுவரம் தீவு பகுதி கடலோர பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய கடல் அலைகள் அதிகமாக வீசக் கூடும். இதனால் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் ராமேசுவரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் ஊர்தி செயற் கருவிகள், தளவாடங்கள், பணியாளர்கள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் உள்ளனர்.


மேலும் ராமேசுவரம் கடலோர பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் மழை நீரால் ஏற்படும் பாதிப்பில் பாதுகாத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வுகளையும் செயல்முறைகளையும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் ராமேசுவரம் தீவு பகுதியில் பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மழை காலங்களில் மீன்பிடிக்க செல்ல முடியாமல் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களில் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் பாதிப்படையும் நிலை ஏற்படும்.

இதையும் படியுங்கள்...தமிழக கடலோர பகுதியில் மேலடுக்கு சுழற்சி - சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ்

Tags:    

Similar News