செய்திகள்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும்- கே.பாலகிருஷ்ணன்
பயிர் பாதிப்பு குறித்து உடனடியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கும் என்ற உறுதியை முதல்-அமைச்சர் விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் உட்பட அமைச்சர்கள், அதிகாரிகள் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இருப்பினும் நிவாரண உதவிகள் பல பகுதிகளுக்கு சென்று சேரவில்லை என்ற புகார்கள் உள்ளதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.
வீடுகளில் தண்ணீர் புகுந்து உடமைகளை இழந்துள்ள குடும்பங்களுக்கு உடனடியாக தலா ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும். பயிர் பாதிப்பு குறித்து உடனடியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கும் என்ற உறுதியை முதல்-அமைச்சர் விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
மறுவிவசாய பணிகளை மேற்கொள்ள தேவையான இடுபொருட்களையும் இலவசமாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், கியாஸ் கிடையாது- கலெக்டர் அதிரடி