சென்னையில் அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சல்
- ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 28 பேர் காய்ச்சலாலும், ஒருவர் டெங்குவாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- அதிகரித்து வரும் காய்ச்சல்களை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பருவகால மாற்றத்தால் தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. சமீப காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித்தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் ஆஸ்பத்திரிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபோன்று அதிகரித்து வரும் காய்ச்சல்களை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக டெங்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் தேவையில்லா இடங்களில் தண்ணீர் தேங்குதல், கண்ட இடங்களில் குப்பை கொட்டுதல் போன்றவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பருவ கால தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் நோயின் தீவிரத்தைப் பொருத்து நோயாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னையிலும் தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு புற நோயாளிகளிகள் சிகிச்சை பிரிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் உள்நோயாளியாக இருந்து வருகின்றனர். அந்தவகையில், உள்நோயாளிகளாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 28 பேர் காய்ச்சலாலும், ஒருவர் டெங்குவாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் 56 பேர் காய்ச்சலாலும், 5 பேர் டெங்குவாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 14 பேர் காய்ச்சலுக்கும், 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்டான்லி மற்றும் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்பால் உள்நோயாளியாக யாரும் சிகிச்சை பெறவில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 98 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் அனைவரும் சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், 'இன்புளூயன்ஸா' வைரஸ் காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் டாக்டா்கள் தொிவித்தனர்.