செய்திகள்
மழை

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை- 500 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது

Published On 2021-11-26 09:01 GMT   |   Update On 2021-11-26 09:01 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம், வளவனூர், அரசூர், விக்கிரவாண்டி, கூத்தேரிப்பட்டு, முகையூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
விழுப்புரம்:

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6.30 மணி அளவில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து பலத்த மழை பெய்தது.

இந்த மழை இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

தொடர் மழையின் காரணமாக விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கி நின்றது. அந்த தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விழுப்புரம் பகுதியில் உள்ள சாலைகள் இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம், வளவனூர், அரசூர், விக்கிரவாண்டி, கூத்தேரிப்பட்டு, முகையூர் உள்பட மாவட்டத்தின்  பல்வேறு பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்தது. ஏரி, குளங்களின் பாதுகாப்பு கருதி ஏரிக்கு வரும் மழைநீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.

இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியது. கடந்த 2 தினங்களாக விழுப்புரம் மாவட்டத்தில் மழை இல்லாததால் விளை நிலங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடிய தொடங்கியது. இதையடுத்து விவசாயிகள் அறுவடை பணிகளை தொடங்கினர்.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் மீண்டும் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைவெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மழை வெள்ளத்தில் மூழ்கிய விளை நிலங்களை சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News