உள்ளூர் செய்திகள்
யானைகள் புகுந்துள்ளதையும், அதனை விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறை பணியாளர்களையும் படத்தில் காணலாம்.

உடுமலை அருகே கிராமத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

Published On 2022-01-08 09:30 GMT   |   Update On 2022-01-08 09:30 GMT
உடுமலை அருகே உள்ள சின்னக்குமாரபாளையம் உள்ளிட்ட மலையடிவார கிராமங்களுக்குள் நேற்று அதிகாலை யானைகள் கூட்டமாக புகுந்தன.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி வனப்பகுதியில் யானைகள், மான்கள், கரடிகள் என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேவைக்காக அடர்ந்த வனப்பகுதிகளைவிட்டு வெளியே வருகின்றன.  

அப்படி வரும்போது வழித்தடங்களை மாற்றி கொண்டு மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இந்தநிலையில் உடுமலை அருகே உள்ள சின்னக்குமாரபாளையம் உள்ளிட்ட மலையடிவார கிராமங்களுக்குள் நேற்று அதிகாலை யானைகள் கூட்டமாக புகுந்தன. 

அங்குள்ள தென்னை மரத்தில் உள்ள குருத்துக்களை யானைகள் இரவு முழுவதும் தின்றன. மேலும் அங்குள்ள சப்போட்டா பழத்தோட்டங்களில் புகுந்து பழங்களை சேதப்படுத்தின. இதனால் அங்குள்ள விவசாயிகள் பீதி அடைந்தனர்.  

இதுகுறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வனத்துறையினர் முகாமிட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விடாதவாறு இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்:

மலையடிவார கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர். 
Tags:    

Similar News