உள்ளூர் செய்திகள்
கைதான பாத்திமா மற்றும் அவரது கணவர் சரோபின்

நகைக்காக நடந்த சிறுவன் கொலையில் மேலும் ஒருவர் கைது.

Published On 2022-01-24 07:04 GMT   |   Update On 2022-01-24 07:04 GMT
மணவாளக்குறிச்சி அருகே நகைக்காக நடந்த சிறுவன் கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்:

மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஜான் ரிச்சர்டு. மீன்பிடி தொழிலாளி. இவர் சவுதி அரேபியாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சகாய சில்ஜா. இவர்களுக்கு ஜோகன் ரிஷி (வயது 4) என்ற மகனும் 2 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த 21-ந் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஜோகன் ரிஷி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாயார் சகாய சில்ஜா மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோகன் ரிஷியை தேடினார்கள்.

இந்த நிலையில் ஜோகன் ரிஷியை பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா (35) என்பவர் நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட ஜோகன் ரிஷியின் உடலை அவர்  வீட்டு பீரோவில் வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் ஜோகன் ரிஷியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாத்திமாவை கைது  செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

கைது செய்யப்பட்ட பாத்திமா போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். எனக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நான் அக்கம்பக்கத்தினரிடம்  கடன் வாங்கியிருந்தேன். வாங்கிய கடனை சரியாக செலுத்த முடியவில்லை. ஆனால் கடன் கொடுத்தவர்கள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர்.

வாணியக்குடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் ரூ 60 ஆயிரம் கடன் வாங்கியிருந்தேன். அந்த பணத்தை உடனே தராவிட்டால் போலீசில் புகார் செய்வேன் என்று கூறினார். நான் என்ன செய்வது என்று திகைத்தேன்.

சம்பவத்தன்று ஜோகன் ரிஷி எனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அவன் கையில் நகைகள் அணிந்து இருப்பதை பார்த்தேன். அவன் அணிந்திருந்த நகைகளை கழற்றி விற்பனை செய்ய முடிவு செய்தேன்.

இதையடுத்து ஜோகன் ரிஷியிடம் அன்பாக பேசி அவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றேன். பின்னர் அவன் அணிந்திருந்த நகைகளை கழற்ற முயன்றேன். அப்போது ஜோகன் ரிஷி கூச்சலிட்டான்.

இதையடுத்து அவன் வாயில் துணியை திணித்தேன். பின்னர் கைகளை கட்டினேன். கழுத்தை நெரித்த பின்னர் கீழே படுக்க வைத்து தலையணையை வைத்து  முகத்தை அமுக்கினேன். அவன் மீது ஏறி அமர்ந்தேன். இதில் ஜோகன் ரிஷி மூச்சுத்திணறி இறந்தான். பின்னர்அவன் அணிந்திருந்த நகைகளை கழற்றினேன்.

எனது குழந்தைகள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக ஜோகன் ரிஷியின் உடலை துணியால் சுற்றி பீரோவில் வைத்து பூட்டினேன். சாவியை நானே வைத்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் ஜோகன் ரிஷியின் பெற்றோர் அவனை தேடினார்கள். நானும் எதுவும் தெரியாதது போல் அவர்களுடன் தேடினேன்.

இரவு ஜோகன் ரிஷியின் உடலை கடலில் வீசி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் போலீசார் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கடற்கரைப் பகுதியிலும் இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதால் என்னால் கடலில் ஜோகன் ரிஷியின் உடலை வீச முடியவில்லை.

மறுநாள் ஜோகன்ரிஷியின் நகைகளை வங்கியில் அடகு வைத்து கடன் வாங்கிய பெண்ணிடம் கொடுப்பதற்காக சென்று இருந்தேன். அப்போது போலீசார் எனது குழந்தைகளிடம் விசாரித்தபோது அவர்கள் நான் நகை அடகு வைக்க சென்ற விவரத்தை தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து என்னை பிடித்து விட்டனர்.

நான் ஜோகன் ரிஷியிடம் எடுத்த நகையை ரூ40 ஆயிரத்துக்கு அடகு வைத்து கடன் வாங்கிய பெண்ணுக்கு பணத்தை கொடுத்து இருந்தேன். பணத்திற்கு ஆசைப்பட்டு இவ்வாறு செய்துவிட்டேன்

இவ்வாறு அவர்  கூறினார்.

கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது கணவர் ஷரோபினையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் பாத்திமா தக்கலை ஜெயிலிலும் ஷரோபின் நாகர்கோவில் ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.

ஜோகன் ரிஷி கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது தந்தை ஜான் ரிச்சர்டு சவுதி அரேபியாவில் இருந்து நேற்று மாலை ஊருக்கு வந்தார். அவர் மகனின் புகைப்படத்தை பார்த்து கதறி அழுதார். அப்போது அங்கிருந்த உறவினர்கள் அவரை சமாதானம் செய்தனர்.

கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலுக்கு நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இன்று காலை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்த ஜோகன் ரிஷியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் இன்று காலை அடக்கம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News