உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் 3,230 மண் வள அட்டைகள் வழங்க இலக்கு

Published On 2022-01-24 09:15 GMT   |   Update On 2022-01-24 09:15 GMT
திருப்பூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் மண் பரிசோதனை நிலையம் இயங்குகிறது.

திருப்பூர்:

விவசாயிகளின் வருமானத்தை  இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய, மாநில அரசு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நிலத்தின் தன்மையை அறிந்து அதற்கு தகுந்தபடி பயிரிடுவதை முடிவு செய்ய வேண்டுமென வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

அதற்காகவே  மண்வள அட்டை திட்டம் துவங்கப்பட்டது.விவசாயிகள் எடுத்துவரும் மண் மாதிரியை பரிசோதனை செய்து எவ்வகை பயிர்களை பயிரிடலாம் என்பது குறித்தும், பயன்படுத்த வேண்டிய உரங்கள் குறித்த தகவல்களையும், மண் வள அட்டை வாயிலாக வழங்குகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில்  ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் மண் பரிசோதனை நிலையம் இயங்குகிறது. அத்துடன் பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு உடுமலை வரையில் நடமாடும் மண் பரிசோதனை மையம் இயக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மண் வள அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் 3,230 மண் வள அட்டைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:

நிலத்தில் உள்ள கார, அமிலத்தன்மை, உப்பு தன்மை, சுண்ணாம்பு தன்மை அறிந்து தேவையான அளவு நில சீர்திருத்தம் செய்து பிறகு பயிர் வகைகளை தேர்வு செய்ய வேண்டும். மண்ணில் இல்லாத சத்துக்களை, நுண்ணூட்டமாகவும், உரமாகவும் அளிக்கலாம்.

வளர்ந்த பயிர்களுக்கு, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து உள்ளிட்ட நுண்ணூட்ட சத்துகளை வழங்க வேண்டும். இதன்மூலம் உரமிடும் செலவு குறைவதுடன், மண் வளமும் இருமடங்காக உயரும். விவசாயிகள் தங்கள் நிலத்தில் இருந்து தேவைக்கு ஏற்ப மண் மாதிரி எடுத்து மண் பரிசோதனை செய்து கொள்ளலாம். 

ஒரு மாதிரிக்கு 20 ரூபாய் செலுத்தி மண் மாதிரிகளை அளித்தால் ஆய்வு செய்து மண் வள அட்டை வழங்கப்படும். மண் ஆய்வுக்கு பிறகு தேவையான அளவு நுண்ணூட்டம் மற்றும் இயற்கை உரம் பயன்படுத்துவதன் மூலம் 15 முதல் 20 சதவீதம் உற்பத்தி மகசூலை பெருக்க முடியும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடமாடும் பரிசோதனை மையம், மாதம் தோறும் கிராமங்களை தேடிச்சென்று மண் பரிசோதனை செய்து கொடுக்கிறது. மண் மட்டுமல்லாது, பாசன தண்ணீரையும் 20 ரூபாய் செலவில் பரிசோதனை செய்து கொள்ளலாம். மண்வள அட்டையின்படி வேளாண் பணியை திட்டமிட்டு செய்து லாபம் பெறலாம் என்று வேளாண்துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News