உள்ளூர் செய்திகள்
தீக்குளிக்க முயன்ற வாலிபர்

குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு

Published On 2022-01-24 10:37 GMT   |   Update On 2022-01-24 10:37 GMT
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் மனுநீதிநாள் முகாம் நடந்து வருகிறது. இதையொட்டி இன்று திரளான பொதுமக்கள் கோரிக்கை மனுவுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து சென்றனர். 

இந்த நிலையில் ஒரு வாலிபர் குழந்தையுடன் வந்தார். அவர் கலெக்டர் கார் நிறுத்தும் இடம் அருகே திடீரென்று உடலில் மண்எண்ணை ஊற்றிக்கொண்டார். அப்போது குழந்தையின் உடலிலும் மண்எண்ணை சிதறியது. பின்னர் அந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அந்த குழந்தை கதறி அழுதது. இதனை அங்கிருந்தவர்கள் கவனித்து அந்த வாலிபரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை ஆட்டோவில் ஏற்றி தல்லாகுளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். 

போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர், உசிலம்பட்டியை சேர்ந்த ஆனந்தன்(வயது 36). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே சொத்து விவகாரம் தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இதுகுறித்து ஆனந்தன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளித்து  தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக தீக்குளிக்க முயலும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

கலெக்டர் அலுவலகத்திற்கு வரும்பொது மக்களிடம் போலீசார் தீவிர பரிசோதனை நடத்தி, அதன் பிறகே வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News