உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஊட்டியில் ஒரு வயது ஆண்குழந்தை மர்ம மரணம்

Published On 2022-02-16 10:08 GMT   |   Update On 2022-02-16 10:08 GMT
அடித்துக்கொலையா? என போலீசார் தாயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கீதா. இவர் தனது முதல் கணவரை பிரிந்து 2&வதாக கார்த்திக் என்ற வாலிபரை திருமணம் செய்து கொண்டார்.இருவரும் ஊட்டி வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு நித்தீஷ்(வயது3), நித்தின்(1) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து கார்த்திக் தனது மனைவியை பிரிந்து, முதல் மகனான நித்திஷை அழைத்து கொண்டு கோவைக்கு வந்து விட்டார். கீதா, 2&வது மகன் நித்தினுடன் அந்த பகுதியிலேயே வசித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த கீதா வேகமாக, வேகமாக தனது மகனை தூக்கி கொண்டு வெளியில் ஓடி வந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் என்னவென்று விசாரித்தபோது, மகனுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக தெரிவித்தார்.

இதையடுத்து ஆட்டோவில் ஏறி மகனுடன், ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது ஆட்டோ டிரைவர் எதேச்சையாக பின்னால் திரும்பி பார்த்தபோது குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டார்.இதனால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் கொண்டு அந்த பெண்ணை இறக்கி விட்டார். அவர் குழந்தையை தூக்கி கொண்டு ஆஸ்பத்தி ரிக்குள் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதற்கிடையே கீதாவை ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர் குழந்தையின் உடலில் காயம் இருக்கும் தகவல் குறித்து  கிராம நிர்வாக அலுவலரான அஜய்கானுக்கு தகவல் கொடுத்தார்.அவர் ஊட்டி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று  இறந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மகன் இறப்பு குறித்து தாயிடம் விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் குழந்தையின் தந்தையான கோவையில் இருக்கும் கார்த்திக்கையும் ஊட்டிக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர அந்த பகுதியை சேர்ந்த மக்களிடம் விசாரித்தனர். அவர்கள் குழந்தையை தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதால் கீதா தாக்கியதில்  தான் குழந்தை இறந்ததா அல்லது இயற்கையிலேயே இறந்ததா என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
Tags:    

Similar News