உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

திருச்சி மாவட்டத்தில் திருநங்கைகள் வாக்கு சதவீதம் குறைந்தது

Published On 2022-02-20 08:16 GMT   |   Update On 2022-02-20 08:16 GMT
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் திருநங்கைகள் 21 சதவீதம் மட்டுமே வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61.36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் திருநங்கைகள் தரப்பில் 21 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. 

2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் முந்தைய பாராளுமன்ற தேர்தலை போன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திருச்சி மாவட்டத்தில் திருநங்கைகள் குறைந்த அளவிலேயே வாக்களித்தனர். 

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி பகுதியில் 129 திருநங்கைகள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருந்தனர். இதில் 25 பேர் மட்டுமே வாக்களித்தனர். 5 நகராட்சிகளில் 30 பேரில் 8 பேர் மட்டுமே ஜனநாயக கடமையாற்றினர். 

பேரூராட்சி பகுதிகளில் வசித்து வரும் 29 திருநங்கைகளில் 7 பேர் மட்டுமே வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும் சராசரியாக 21 சதவீதம் திருநங்ககைள் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

2019 பாராளுமன்ற தேர்தலில் 148 பேருக்கு 64 பேர் வாக்களித்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் 237 திருநங்கை வாக்காளர்களில்  64 பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர்.  

இதுபற்றி திருச்சி திருநங்கைகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவி கஜோல் கூறும்போது, திருநங்கைகள் பிழைப்புக்காக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து கொண்டே இருப்பார்கள். 

தற்போதைய நிலையில் நிறையபேர் மும்பை மற்றும் டெல்லியில் இருக்கிறார்கள். போக்குவரத்து செலவினம், வாழ்வாதார பிரச்சினை போன்றவற்றால் இங்கு வாக்களிக்க வரவில்லை. 

சில பேர் வடமாநிலங்களில் வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள். அதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்றார்.
Tags:    

Similar News