உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

செயற்கையான பற்றாக்குறை மூலம் யூக பேரம் - பருத்தி வர்த்தகர்கள் மீது புகார்

Published On 2022-03-02 06:51 GMT   |   Update On 2022-03-02 06:51 GMT
கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவித்த பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி நம் நாட்டில் பருத்தி சந்தை நிலைமையை மோசமாக்கியுள்ளது.
திருப்பூர்:

பருத்தி வர்த்தகர்கள் சிலர் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி யூக பேரத்தில் ஈடுபடுகின்றனர் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தென் இந்திய பஞ்சாலைகள் சங்கத் தலைவர் ரவிசாம்  கூறியதாவது:

நம் நாட்டில் பருத்திக்கு செயற்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சில வர்த்தகர்கள் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி அதன் வாயிலாக யூக பேரத்தில் ஈடுபடுகின்றனர். அபரிமிதமான விலை உயர்வு காரணமாக ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்ட ‘ஆர்டர்’களை நிறைவேற்றுவதற்கு கடும் சிரமப்படுகின்றனர்.

ஆந்திராவில் பல மில்களில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வழக்கத்துக்கும் மாறாக ஓராண்டில் பருத்தி விலை 62 சதவீதம் உயர்ந்து ஒரு கிலோ ரூ. 135ல் இருந்து ரூ.219 ஆக உயர்ந்துள்ளது.

இதை சரிக்கட்ட மத்திய அரசு 40 லட்சம் பேல் பருத்தியை வரியில்லாமல் இறக்குமதி செய்ய அனுமதித்து வேலை வாய்ப்பு இழப்பை தவிர்க்க வேண்டும். கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவித்த பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி நம் நாட்டில் பருத்தி சந்தை நிலைமையை மோசமாக்கியுள்ளது. 

விதையுடன் கூடிய பருத்தி விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட 70 சதவீதம் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மேலும் விலை உயரும் என்ற நம்பிக்கையில் பதுக்கி வைத்துள்ளனர். சீசன் இல்லாத காலத்தில் தொழிலாளர்கள் வேலை இழப்பை தடுக்க பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News