உள்ளூர் செய்திகள்
குண்டம் இறங்கிய பக்தர்கள்

பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா

Published On 2022-03-02 08:02 GMT   |   Update On 2022-03-02 08:02 GMT
ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் குண்டம் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
ஈரோடு:

ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் குண்டம்  விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.

ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் குண்டம்  விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  ஈரோடு மட்டுமின்றி  குமாரபாளையம், பள்ளி பாளையம், நாமக்கல்,  கொடுமுடி, சிவகிரி போன்ற பகுதிகளில் இருந்து  ஆயிரக்கணக்கான மக்கள் விரதம் இருந்து தீ மிதிப்பது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா  கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி இரவு 9 மணி அளவில் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.  அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது.

கடந்த 21-ந் தேதி இரவு கொடி ஏற்றப்பட்டது. 27-ந் தேதி பால் அபிஷேகம் நடந்தது. 28-ந் தேதி அக்னி கபாலம் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் விரதமிருந்து அக்னிசட்டி ஏந்தி வந்தனர். இதையடுத்து நேற்று இரவு குண்டம் பற்றவைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

அதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. குண்டம் இறங்குவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பே கோவில் வளாகத்தில் மக்கள் வந்து இடம் பிடித்திருந்தனர். 

முதலில் கோவில் பூசாரி குண்டம் இறங்கினர்.அதைத்தொடர்ந்து பொதுமக்கள் குண்டம் இறங்கினர். குறிப்பாக பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர். சில திருநங்கைகளும் குண்டம் இறங்கினர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குண்டம் இறங்கினர். 

இதை தொடர்ந்து இன்று இரவு பத்ரகாளி அம்மன் நகர்வலம் நடைபெறுகிறது. நாளை மாலை 5 மணி மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News