உள்ளூர் செய்திகள்
சிவகங்கை யூனியன் தமறாக்கி சாலையில் இடையமேலூர் பாசன கண்மாயில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை கலெக்டர் மதுசூதன்ரெட்டி

வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

Published On 2022-03-02 12:26 GMT   |   Update On 2022-03-02 12:26 GMT
சிவகங்கை யூனியனில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்துமுடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இடையமேலூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் கிராமச்சந்தை வளாகம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பொதுமக்கள் நாள்தோறும் வந்து பயன்பெறக்கூடிய வகையில் உள்ளதால், போதியஅளவு உள்கட்டமைப்பு வசதிகளுடன் பணிகளை திட்டமிட்டபடி விரைந்து முடித்திடவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதேபகுதியில் ரூ.5.40 லட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவுசெய்து பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், அங்கு பணியாற்றும் பணியாளர்கள் நல்லமுறையில் பராமாரித்து வரவேண்டும். அதன்மூலம் கிராம ஊராட்சிக்கு வருவாய் ஈட்டும் அளவிற்கு பல்வேறு மரங்களின் மூலம் பலவகையான பயன்கள் கிடைக்கும். எனவே ஊராட்சிபணியாளர்கள் கண்காணித்து பராமரிக்கவேண்டுமென கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.

பின்னர் தமறாக்கி சாலையில் ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் இடையமேலூர் பாசன கண்மாயில் கட்டப்பட்டு உள்ள தடுப்பணையை பார்வையிட்டதுடன், தடுப்பணைக்கு தண்ணீர் வரவுள்ள வரத்துக்கால்வாய் சீர்செய்து எப்பொழுதும் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் மழை காலங்களில் வரும் தண்ணீர் கண்மாய்க்கு வருவதுடன், தடுப்பணையில் தண்ணீர் தேங்குவதன் மூலம் விளைநில பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயருவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.

ஒத்தப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மையத்தை பார்வையிட்டதுடன், அங்குள்ள பள்ளிக்கட்டிடங்களை நடப்பு நிதியாண்டில் புதுப்பிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அழகமாநேரி ஊராட்சியில் ரூ23லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சிமன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டுவருவதை பார்வையிட்டதுடன், அந்த பணிகளை விரைந்துமுடிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, அழகமாநேரி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடவுசெய்து பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார். 

அப்போது மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அதிகளவு நிழல்தரும் மரங்களை நடவுசெய்து பராமரிக்க வேண்டுமென பணியாளர்களுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவுறுத்தினார். 

இந்த ஆய்வில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் உதவித்திட்ட அலுவலர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரத்தினவேல்,  அன்புச்செல்வி, உதவி பொறியாளர் கார்த்தியாயினி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News