உள்ளூர் செய்திகள் (District)
அதிமுக - பாஜனதா

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்துக்கு அ.தி.மு.க.-பா.ஜனதா உள்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு

Published On 2022-03-21 08:34 GMT   |   Update On 2022-03-21 08:34 GMT
மேகதாது அணை கட்டும் கர்நாடகாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அ.தி.மு.க., பா.ஜனதா உள்பட அனைத்து கட்சிகளும் ஆதரித்தன.
சென்னை:

தமிழக சட்டசபையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடகாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அ.தி.மு.க., பா.ஜனதா உள்பட அனைத்து கட்சிகளும் ஆதரித்தன.

இதுதொடர்பாக அந்த கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேசியதாவது:-

எடப்பாடி பழனிசாமி (எதிர்க்கட்சி தலைவர்):- காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக எங்களது மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தொடர்ந்து போராடி வந்துள்ளார்கள். மத்திய அரசை அணுகி பலமுறை நாங்களும் வலியுறுத்தியுள்ளோம்.

கர்நாடகாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டிலும் மனுக்களை போட்டுள்ளோம். இப்படி அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து காவிரி நீர் பிரச்சினைக்காக போராடியும், வாதாடியும் வந்துள்ளோம். இருப்பினும் எந்த உத்தரவையும் மதிக்காமல் கர்நாடக அரசு காவிரி நீர் விவகாரத்தில் செயல்படுவதும், தற்போது மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதும் வேதனை தருவதாக உள்ளது.

கர்நாடக அரசின் செயல்பாடுகளால் விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு காவிரி விவசாய பகுதிகள் பாலைவனமாகி விடுமோ என்ற கவலையும் அவர்கள் மத்தியில் உள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் இது தொடர்பாக ஏற்கனவே 2 முறை தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 20 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாக திகழும் காவிரியில் நமக்குள்ள உரிமையை பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.

நீர் வளத்துறை அமைச்சர் பேசும்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நானும் இந்த நேரத்தில் எனது ஆதங்கத்தை குறிப்பிட வேண்டியுள்ளது.

1999-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் அங்கம் வகித்த போதே நீங்கள் (தி.மு.க.) இந்த பிரச்சினையை தீர்த்து இருக்கலாம். 10 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது காவிரி நீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

இருப்பினும் தமிழகத்தின் நலன் கருதி சட்டசபையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை அ.தி.மு.க. ஒரு மனிதாக வரவேற்கிறது.

இவ்வாறு அர் பேசினார்.

அதன் பிறகு பேசிய அமைச்சர் துரைமுருகன், எடப்பாடியார் பழைய சுய புராணத்தை பாடி இருக்கிறார் என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, பழைய வரலாறுகளை சொல்ல வேண்டியது எங்கள் கடமை என்ற அடிப்படையிலேயே கருத்துக்களை கூறினேன் என்று தெரிவித்தார்.

அதன் பிறகு பேசிய துரைமுருகன், “மேற்கொண்டு இதுபற்றி பேசி நான் திசை திருப்ப விரும்பவில்லை. தீர்மானத்தை ஆதரித்து பேசிய அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

முன்னதாக இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசியவர்கள் வருமாறு:-

நயினார் நாகேந்திரன் (பா.ஜனதா):-

தமிழக சட்டசபையில் கர்நாடக அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்கிறோம். தமிழக அரசுக்கு இந்த வி‌ஷயத்தில் முழு ஆதரவு அளிக்கிறோம். தனிப்பட்ட முறையில் பா.ஜனதா சார்பிலும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

செல்வபெருந்தகை (காங்கிரஸ்):- காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்று ஆதரவு தெரிவிக்கிறது. காவிரி விவகாரம் 130 ஆண்டு நீண்ட நெடிய போராட்டம் ஆகும். இதற்கு முன்னர் தமிழக முதல்-அமைச்சர்களும் இந்த பிரச்சினைக்கு தொடர்ந்து போராடி இருக்கிறார்கள்.

நம்முடைய முதல்-அமைச்சரும் காவிரி விவகாரத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார். ஏனென்றால் அவர் யாருக்கும் அஞ்சப்போவதும் இல்லை. யாரிடமும் கெஞ்சப்போவதும் இல்லை.

ஜி.கே.மணி (பா.ம.க.):- மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவுக்கு எதிரான தீர்மானத்தை பா.ம.க. வரவேற்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு பா.ம.க. துணை நிற்கும். மத்திய நீர் வளத்துறை மந்திரி சஜேந்திரசிங் செகாவத் கர்நாடகாவுக்கு துணை போகும் நிலை உள்ளது. எனவே தமிழக முதல்-அமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி அவர்களுடன் சென்று பிரதமரை சந்திக்க வேண்டும்.

சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள்):- தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை விடுதலை சிறுத்தைகள் ஆதரிக்கிறது. இது தொடர்பாக அரசு மேற்கொள்ள உள்ள அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் துணை நிற்போம்.

நாகை மாலி (மார்க்சிஸ்டு கம்யூ.):- மேகதாது அணை விவகாரத்தில் உணர்வுப்பூர்வமான இந்த தீர்மானத்தை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆதரித்து வரவேற்கிறது.

ஜி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூ.):- மேகதாது விவகாரத்தில் கர்நாடக முதல்-அமைச்சர் ஆணவத்துடன் பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி முழுமனதாக வரவேற்கிறது.

சதன் திருமலைகுமார் (ம.தி.மு.க.):- காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறோம். அதற்கு ம.தி.மு.க. எப்போதும் துணை நிற்கும்.

அப்துல்சமது (மனித நேய மக்கள் கட்சி):- வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த தீர்மானத்தை மனித நேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த தீர்மானத்துக்கு நாங்கள் துணை நிற்போம்.

ஈஸ்வரன் (கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி):- கர்நாடக அரசு மேகதாது விவகாரத்தில் செயல்படுவதற்கு எதிராக கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி முழுமனதுடன் வரவேற்கிறது.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி):- மேகதாது விவகாரத்தில் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் தமிழகத்துக்கு சாதகமாக இல்லை. ஒவ்வொரு முறையும் காவிரி நீர் விவகாரத்தின்போது அங்குள்ள தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். அதனை தடுத்து நிறுத்த வேண்டியது நமது கடமையாகும். தமிழக அரசு கொண்டுள்ள இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்.

ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்):- தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை புரட்சி பாரதம் கட்சி வரவேற்கிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.



Tags:    

Similar News