உள்ளூர் செய்திகள்
எஸ்.பி.வேலுமணி

சொத்து வரி உயர்வை அரசு கைவிட வேண்டும்- சட்டசபையில் எஸ்.பி. வேலுமணி பேச்சு

Published On 2022-04-08 10:56 GMT   |   Update On 2022-04-08 10:56 GMT
விவசாயிகள், பொதுமக்களின் எண்ணத்துக்கு மாறாக அன்னூர் ஒன்றிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்.
கோவை: 

சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதத்தில் அ.தி.மு.க. கொறடா எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:

தமிழகத்தின் குக்கிராமங்களை இணைக்கும் பிரதான சாலைகள், முக்கிய ஊரக இணைப்பு சாலைகளை மேம்படுத்த பிரதமரின் கிராம சாலை திட்டத்தை மேற்கொள்ள உள்ள பணிகளுக்கு ஜெயலலிதா ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. 

அதை விரைந்து செயல்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சிறப்பான செயல்பாட்டிற்கும், குறித்த காலத்தில் ஊதியம் வழங்கியதற்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அப்போதைய அரசு தேசிய விருது பெற்று தமிழகத்துக்கு புகழ் சேர்த்தது. 

கோவையில் புதிய தொழில் பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தரிசு நிலங்களாக இருந்த நிலங்கள் எடப்பாடி பழனிசாமி செயல்படுததிய அத்திக்கடவு- அவினாசி திட்டத்தால் பாசன வசதி பெறும் நிலங்களாக மேம்பட்டு உள்ளது. 

எனவே விவசாயிகள், பொதுமக்களின் எண்ணத்துக்கு மாறாக அன்னூர் ஒன்றிய கிராமங்களில் நிலம் கையகப்ப-டுத்துவதை அரசு கைவிட வேண்டும்.

 தரிசு நிலங்களை கண்டறிந்து தொழில் பூங்கா அமைக்க வேண்டும். அதுபோன்று ஆதி திராவிடர்கள் மற்றும பழங்குடியினர் வசிக்கும் பழுதடைந்த தொகுப்பு வீடுகள் சரிசெய்ய சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

முதல்வரின் முகவரி திட்டம் தொடங்கப்பட்டு 10 லட்சத்து ஆயிரத்து 883 மனுக்கள் தீர்வு காணப்பட்டு உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆனால் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 10 சதவீதம் அளவிலான மனுக்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டு உள்ளது. பிற மனுக்களின் நிலை என்ன? 

நிதிநிலை அறிக்கை நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் ஏமாற்றம் அளிக்கும் காகிதப்பூ பட்ஜெட்டாக உள்ளது. 150 சதவீதம் வரை உயர்த்தி உள்ள சொத்து வரி உயர்வை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News