உள்ளூர் செய்திகள்
பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

குளு குளு சீசனால் உடுமலை பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலாப்பயணிகள்

Published On 2022-06-04 05:31 GMT   |   Update On 2022-06-04 05:31 GMT
கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால் பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் அடையவில்லை.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் அமணலிங்கேசுவரர் கோவிலின் மேற்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு, பாலாறு, உழுவியாறு உள்ளிட்டவை நீராதாரமாகும். வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர்வரத்து ஏற்படுகிறது.

வனப்பகுதியில் பல்வேறு வழிகளில் ஓடிவருகின்ற ஆறுகளில் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து அருவியாக கொட்டுகிறது. இந்த அருவியில் குளிப்பதால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அதில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால் பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் அடையவில்லை.

இருப்பினும் வனப்பகுதியில் மழை பெய்ததால் பஞ்சலிங்க அருவி, வனப்பகுதி, அடிவாரப்பகுதியில் வெப்பத்தின் தாக்குதல் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குவிந்து வருகின்றனர். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அருவியில் குளித்து மகிழ குழந்தைகளுடன் பெற்றோர்கள் வருகின்றனர். அருவியில் மிதமான அளவு தண்ணீர் வருவதால் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News