உள்ளூர் செய்திகள்

கலெக்டர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2,761 கர்ப்பிணிகளுக்கு சஞ்சீவி மகப்பேறு பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது-கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

Published On 2023-01-04 09:03 GMT   |   Update On 2023-01-04 09:03 GMT
  • சஞ்சீவி பெட்டகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
  • யோகா பயிற்சி சுகப்பிரசவத்துக்கு மிகவும் உதவுவதாக அமைந்து உள்ளது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் இயங்கி வரும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை சார்பில் கர்ப்பிணிகளின் சுகப்பிரசவத்துக்காக நெல்லிக்காய் லேகியம், உளுந்து தைலம், மாதுளை மணப்பாகு போன்ற 9 சித்த மருந்துகள் உள்ளடக்கிய சஞ்சீவி பெட்டகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இதன் மூலம் 2,761 கர்ப்பிணிகள் பயன்பெற்றுள்ளனர்.

கொரோனா தொற்று காலங்களில் சித்த மருத்துவத்துக்கென தனியாக இரண்டு சிறப்பு சிகிச்சை மையங்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் 150-க்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர். தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் குடிநீர் வழங்கல், பள்ளிகளில் விழிப்புணர்வு மற்றும் யோகா, கர்ப்பிணிகளுக்கு சுக மகப்பேறு தரும் மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கல், துணை சுகாதார நிலையங்களின் மூலம் யோகா பயிற்சி, மூலிகை மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கல், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி, தொற்றா நோய்களுக்கு யோகா பயிற்சி, கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் என பல்வேறு திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கர்ப்ப காலத்தில் ரத்தக் குறைவை நிவர்த்தி செய்யவும், சுகப்பிரசவம் ஏற்படவும் சித்த மருந்துகள் பெரிதும் உதவுகிறது. கொரோனா தொற்று காலங்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. டெங்கு வைரஸ், சாதாரண வைரஸ் தொற்று காலங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதன் மூலம் 3 லட்சத்து 31 ஆயிரத்து 936 பொதுமக்கள் பயன்பெற்றனர். வீட்டு சிகிச்சையிலேயே நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்.

கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் தொற்று நோய்களான சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றை கட்டுப்படுத்த துணை சுகாதார நிலையங்களில் யோகா பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இதுவரை 2317 பேர் பயன்பெற்றுள்ளனர். யோகா பயிற்சிகள் கர்ப்பிணி பெண்களின் சுகப்பிரச வத்துக்கு மிகவும் உதவுவதாக அமைந்து உள்ளது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News