உள்ளூர் செய்திகள்

வடலூர் அருகே வாலாஜா ஏரியில் விஷம் கலந்த தானியங்களை வைத்து பறவைகளை கொன்ற 3 பேர் கைது

Published On 2023-09-28 07:41 GMT   |   Update On 2023-09-28 07:41 GMT
  • வடலூர் அருகே வாலாஜா ஏரியில் விஷம் கலந்த தானியங்களை வைத்து பறவைகளை கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • பழனி என்பவருக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் மயங்கி விழுந்து இறந்தன.

கடலூர்:

கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த மேலக்கொளக்குடி பகுதியில் உள்ள வயல் வெளிகளில், குறுவை நெல் அறுவடைக்கு பின் வாத்துக்களை மேய்த்து வந்தனர். அப்போது ஆந்திராவை சேர்ந்த பழனி என்பவருக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் மயங்கி விழுந்து இறந்தன. இதேபோல சம்பங் கோழிகளும், அபூர்வ பறவைகளும் அதே இடத்தில் இறந்து கிடந்தன. இது குறிந்து பன பறவை பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலாஜா ஏரி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.

விசாரணை நடத்தியபோது, அவர்கள் கையில் வைத்திருந்த பையில், கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களில் குருணை மருந்து கலந்து வைத்திருந்தனர். உடனடியாக 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் கருங்குழியை சேர்ந்த பிரபாகரன் (வயது 36), அருள்தாஸ் (56), மேலக்கொளக்குடி பொங்கல்மாறன் (57) என்பது தெரியவந்தது. மேலும், இந்த 3 பேரும் வாலாஜா ஏரிகளுக்கு வரும் குருவி, கொக்கு, நாரை, நீர்க்கோழி போன்றவைகளை பிடிப்பதற்காக தானியங்களில் மருந்து கலந்து வைத்ததும், அதனை உண்ட 200-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் இறந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News