உள்ளூர் செய்திகள்

திருச்சியில் சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு

Published On 2024-09-18 09:10 GMT   |   Update On 2024-09-18 09:19 GMT
  • அதிர்ஷ்டவசமாக ரெயில் பெட்டிகள் தடம் புரளவில்லை.
  • பயணிகள் உயிர் தப்பினர்.

திருச்சி:

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 1.10 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தது. அங்குள்ள நடைமேடை பகுதியில் எஞ்சின் டிரைவர் ரெயிலை நிறுத்த முயன்றார்.

அப்போது அந்த ரெயிலின் கடைசி 3 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. இதைக்கண்டு, சேது எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளும், ரெயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதிர்ஷ்டவசமாக ரெயில் பெட்டிகள் தடம் புரளவில்லை. இதனால் பயணிகள் உயிர் தப்பினர்.

உடனே இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில் நிலைய பொறியாளர்கள் விரைந்து வந்து ரெயில் பெட்டிகளை இணைத்தனர்.

அதன்பிறகு ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. பெட்டிகள் இணைப்பு பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் காரணமாக சுமார் அரை மணி நேரம் தாமதமாக சேது எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையை சென்றடைந்தது. ரெயிலில் இருந்து பெட்டிகள் தனியாக கழன்று ஓடிய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News