உள்ளூர் செய்திகள்

காரமடையில் அதிரடி சோதனை- போலி டாக்டர்கள் 3 பேர் சிக்கினர்

Published On 2023-04-11 06:23 GMT   |   Update On 2023-04-11 06:23 GMT
  • காரமடை பகுதியில் சிலர் டாக்டருக்கு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கலெக்டர் அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
  • முதல்கட்ட விசாரணையில் 2 பேர் போலி டாக்டர்கள் எனவும், ஒருவர் அவர்களுக்கு உதவி செய்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சிலர் டாக்டருக்கு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கலெக்டர் அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதுதொடர்பாக தகவல் காரமடை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் உஷார்படுத்தப்பட்டனர்.

அதன்படி போலீசார் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கணுவாய்பாளையம் பிரிவு, வெள்ளியங்காடு, தாயனூர் ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் போலி மருத்துவ சான்றிதழ்களுடன் கிளினிக் நடத்தி வந்த 2 போலி டாக்டர்கள் உள்பட 3 பேர் சிக்கி உள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில் அவர்களில் 2 பேர் போலி டாக்டர்கள் எனவும், ஒருவர் அவர்களுக்கு உதவி செய்தவர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் ஒருவர் தலைமறைவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விசாரணை நடப்பதால் பெயர் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரிடம் சிக்கிய போலி டாக்டர்கள் ஏற்கனவே கொரோனா பேரிடர் பொதுமுடக்க நேரத்தில் மேல்பாவி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தபோது பழங்குடியின மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தோல் நோய்கள் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காரமடை வட்டார சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையை பூட்டிச் சென்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் போலி மருத்துவ கும்பல் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News