கோவை விமான நிலையம் வழியாக மே மாதத்தில் 3 லட்சம் பயணிகள் பயணம்
- கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன் தினமும் குறைந்தபட்சம் 35 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன
- தற்போது தினமும் 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கோவை,
கொரோனா பரவலுக்கு பின் கோவை விமான நிலையத்தில் மாதாந்திர பயணிகள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையம் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட ஏழு மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. சென்ைன, பெங்க ளூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட இரு வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன் தினமும் குறைந்தபட்சம் 35 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. மாதந்தோறும் பயணிகள் எண்ணிக்கை 3 லட்சமாக பதிவு செய்யப்பட்டது.
கொரோனா பரவலால் விமான இயக்கம் கோவையில் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில மாதங்கள் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. சரக்கக அலுவலகம் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
ஆக்சிஜன் கருவிகள், முகக்கவசம், 'பிபிஇ' என்று சொல்லக்கூடிய பாது காப்புக் கவச உடைகள் பல்ஸ் ஆக்ஸி மீட்டர், மருந்துகள் உள்ளிட்ட அத்திவாசிய மருத்துவ பொருட்கள் சரக்கு விமானங்களில் கையாளப்பட்டு வந்தன. கொரோனா பரவல் தாக்கத்தில் இருந்து விமான நிலையம் மீண்டு வரத்தொடங்கியது.
தற்போது தினமும் 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சில நாட்களில் 27 அல்லது 28 விமானங்கள் கூட இயக்கப்படுகின்றன. விமான நிலையத்தில் மாதாந்திர பயணிகள் எண்ணிக்கை கொரோனாவுக்கு முன் 3 லட்சம் என்ற அளவில் இருந்தது.
தற்ேபாது மூன்றாண்டுகளுக்கு பின் கடந்த மே மாதத்தில் உள்நாட்டு பிரிவில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 105 பேர், வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் 19 ஆயிரத்து 178 பேர் என மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 283-ஆக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, "கொரோனா பரவலால் விமானங்கள் இயக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டன.
தொற்று பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
இதற்கேற்ப விமான நிறுவனங்களும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகின்றன. இலங்கை நாட்டுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட சேவை மற்றும் உள்நாட்டின் சில நகரங்களுக்கு கூடுதல் விமான சேவை எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது" என்றனர்.