பணம், நகை பறித்த 3 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
- சேலம் தாதகாப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த பிரபல ரவுடி கத்தி முனையில் பால்ராஜ் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.2,700 பறித்துக் கொண்டார்.
- இது குறித்த புகார் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி மாதேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி ஸ்ரீரங்கம் 5-வது தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் பால்ராஜ் (வயது 27). இவர் கடந்த 8-ந் தேதி மூலப்பிள்ளையார் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மாதேஷ் (26), கத்தி முனையில் பால்ராஜ் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.2,700 பறித்துக் கொண்டார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள், மாதேசை பிடிக்க முயன்றபோது கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்த புகார் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி மாதேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சேலம் லைன்மேடு புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணி (45). கார் டிரைவரான இவர், கடந்த 10-ந் தேதி மோட்டார் சைக்கிளில் தாதகப்பட்டி மேட்டு தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவரை வழிமறித்த, தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு அம்மன் நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பிச்ச கார்த்தி (24), கத்தியை காட்சி மிரட்டி மணியிடம் இருந்து 2 பவுன் சங்கிலி, ரூ.2175 பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல், சேலம் லைன்மேடு வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (54). இவர் கடந்த 6-ந் தேதி சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகர் ஜங்ஷன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இவரை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி விஜய் (36), கத்தி முனையில் மிரட்டி சீனிவாசனிடம் இருந்து 2 1/4 பவுன் சங்கிலி மற்றும் ரூ.4,300 பறித்துக் கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டம்
கைது செய்யப்பட்ட ரவுடிகள் 3 பேரும், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதன் பேரில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா, ரவுடிகள் பிச்ச கார்த்தி, மாதேஷ், விஜய் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார்.