ஊட்டியில் தினமும் குவியும் 30 டன் குப்பைகள்
- பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் கிலோ ஆகும்.
- மக்கும்- மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க முன்வர வேண்டும்
ஊட்டி,
ஊட்டி நகராட்சியில் கமர்சியல் சாலை, பூங்கா சாலை, லோயர் பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் அதிகம் உள்ளன. இங்கு தூய்மைப்பணியாளர்கள் அதிகாலை, இரவு நேரங்களில் குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.
அங்கு பழத்தோல், முட்டை ஓடுகள், காய்கறி கழிவுகள், தோட்டக் கழிவுகள் ஆகிய மக்கும் குப்பைகள், பிளாஸ்டிக், பாட்டில் உள்ளிட்ட மக்காத குப்பைகள், மருந்து மாத்திரைகள், ஊசி, சானிட்டரி நாப்கின் போன்ற தீங்கு விளைவிக்கும் குப்பைகள் ஆகியவை 3 வகைளில் தரம் பிரிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.
ஊட்டியில் தினமும் சராசரியாக சுமார் 30 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. கோடை சீசனில் கடந்த 2 மாதங்களில் மட்டும் தினமும் 24 லட்சம் கிலோ குப்பைகள் வீதம் சேகரிக்கப்பட்டு உள்ளது.
இதில் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் கிலோ ஆகும். இந்த நிலையில் ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளில் ஒருசிலர் சமூக பொறுப்பின்றி குப்பைகளை சாலையில் வீசி செல்கின்றனர். எனவே அவற்றை தரம் பிரித்து சேகரிக்க அதிக நேரம் ஆகிறது.
எனவே தூய்மை பணியாளர்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று குப்பைகளை சேகரிக்க கால தாமதம் ஆகிறது அதிலும் குறிப்பாக ஊட்டியின் முக்கிய வர்த்தக பகுதிகளான மெயின்பஜார் அப்பர் பஜார் ஆகிய பகுதிகளில் பிரிக்கப்படாத குப்பைகள் குவிந்து கிடப்பதை பார்க்க முடிகிறது.
எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, மக்கும்- மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க முன்வர வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்