புதுச்சேரியில் இருந்து நாகைக்கு மதுபாட்டில்கள் கடத்திய 4 பேர் கைது
- 180 மி.லி. கொண்ட 96 மது பாட்டில்கள் மற்றும் 230 லிட்டர் பாண்டி சாராயம் இருந்தது.
- காரில் 4 நபர்கள் வந்தவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கீழ்வேளூர் போலீஸ் சரகம் பெருங்கடம்பனூர் - சிக்கல் சாலையில் உள்ள குற்றம் பொருத்தானிருப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த காரில் காரைக்கால் பகுதியில் இருந்து கடத்திவரப்பட்ட வெளி மாநில 90மிலி கொண்ட 1920 மது பாட்டில்களும், 180மிலி கொண்ட96 மது பாட்டில்களும் மற்றும் 230 லிட்டர் பாண்டி சாராயமும் இருந்தது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரில் 4 நபர்கள் வந்தவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காரில் வந்த நாகை வெளிப்பாளையம் வ.உ.சி. தெருவை சேர்ந்த தென்னரசன் (வயது 57), வெளிப்பாளையம் கொட்டுப்பாளைய தெரு காளியப்பிள்ளை சந்து பகுதியை சேர்ந்த யாசர் அரபாத் (35), காரைக்கால், தருமபுரம் தெற்கு தெருவை சேர்ந்த செல்வம் (47), காரைக்கால் காமராஜர் நகரை சேர்ந்த கருணாகரன் (43) ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை தனிப்படை போலீசார் கீழ்வேளூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தென்னரசன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.