உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு 4 காதல் ஜோடிகள் தஞ்சம்

Published On 2022-06-11 08:18 GMT   |   Update On 2022-06-11 08:18 GMT
  • வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர்.
  • ஒரே நாளில் அதிக அளவில் காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்ததால் போலீஸ் நிலையம் திருமண மண்டபம் போல் காட்சி அளித்தது.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள ஒத்தநாவலபட்டியைச் சேர்ந்தவர் வெள்ளம்மாள் (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (23). இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கோவிலில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சரண்யா (20). நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவரும் செட்டியபட்டி முள்ளிப்பாடியைச் சேர்ந்த ஈஸ்வரன் (22) என்பவரும் கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக காதலித்து வந்தனர்.

நேற்று திருமலை க்கேணியில் திருமணம் செய்து கொண்ட இவர்கள் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தனர்.

எரியோடு மூக்கைய கவுண்டனூரைச் சேர்ந்தவர் நல்லேந்திரன் (வயது 20). ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரும் தென்னம்பட்டி கணபதிபுரத்தைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான தேவதர்சினி (20) என்பவரும் காதலித்து வந்தனர்.

இவர்கள் காதலுக்கும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

வடமதுரை அருகே கோட்டைகட்டியூரை சேர்ந்தவர் சகுடீஸ்வரன் (வயது25). இவர் வேடசந்தூர் பகுதியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வருகிறார். அதே மில்லில் அய்யலூர் அருகே மாமரத்துப்பட்டியை சேர்ந்த ராதிகா (21) என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வீட்டை விட்டுவெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு வீட்டாரரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீசார் காதலர்களின் பெற்றோர்களை தனித்த னியாக வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ்வதற்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டனர். பெரும்பாலான காதல் ஜோடிகள் போலீஸ் நிலையத்துக்கு வரும் போதே தங்களுக்கும் பெற்றோருக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பதை பத்திரத்தில் எழுதிக் கொண்டு வந்து அதனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நேற்று முகூர்த்த நாள் என்பதால் 3 காதல் ஜோடிகள் அடுத்தடுத்து போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்ததால் போலீஸ் நிலையம் திருமண மண்டபம் போல காட்சியளித்தது.

Tags:    

Similar News