உள்ளூர் செய்திகள் (District)

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 40 யானைகள் முகாம்: இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் -வனத்துறையினர் எச்சரிக்கை

Published On 2022-11-27 09:49 GMT   |   Update On 2022-11-27 09:49 GMT
  • ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கிருந்து வெளியேறின.
  • வனத்துறை, வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை,

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தமிழக எல்லையான ஜவளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் பல்வேறு குழுக்ககளாக பிரிந்து சுற்றித்திரிகின்றன.

மேலும் விவசாய நிலங்களில் புகுந்து நெல், ராகி, உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக மாநில எல்லையான ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கிருந்து வெளியேறின.

பின்னர் பல்வேறு கிராமங்கள் வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் புகுந்து யானைகள் முகாமி ட்டுள்ளன. முன்னதாக இந்த காட்டு யானைகள் கூட்டமாக தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலையில் மரக்கட்டா வனப்பகுதியில் சாலையை கடந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை நிறுத்தி காட்டு யானைகள் வனப்பகுதிக்கு செல்ல வழிவகை செய்தனர். அதன் பிறகு அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது.

தற்போது 40 காட்டு யானைகளும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளன. இதனால் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம்.

காட்டு யானைகள் தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கிராம மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறை, வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News