உள்ளூர் செய்திகள்

அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால பணி 40 சதவீதம் நிறைவு

Published On 2022-12-31 09:02 GMT   |   Update On 2022-12-31 09:02 GMT
  • வணிக நிறுவனங்கள், டைடல் பார்க் போன்றவை இந்த சாலையில் தான் அமைந்துள்ளன.
  • உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி டிசம்பர் 2020-ம் ஆண்டு தொடங்கியது.

கோவை,

கோவை மாநகரின் பிரதான சாலையாக அவினாசி சாலை கருதப்படுகிறது.

விமான நிலையம், பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், டைடல் பார்க் போன்றவை இந்த சாலையில் தான் அமைந்துள்ளன.

சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. இதனால் அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும் 10.10 கி.மீ நீளத்தில் ரூ.1,621.30 கோடி மதிப்பில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி டிசம்பர் 2020-ம் ஆண்டு தொடங்கியது.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த மேம்பாலமானது, எதிர்வரும் 30 ஆண்டுகளுக்கான வாகன பெருக்கத்தை கருத்தில் ெகாண்டு திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 10.10 கி.மீ நீளத்தில் 17.25 மீட்டர் அகலத்தில் 4 வழிப்பாதையாக அமைக்கப்பட உள்ளது.

4 இடங்களில் ஏறுதளமும், 4 இடங்களில் இறங்கு தளமும், 6 மீட்டர் அகல ஓடுபாதையுடன் அமைய உள்ளது. இப்பணியில் 10.50 மீட்டர் அகலத்தில் இருபுறமும் அணுகுசாலையும், 1.50 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன் கூடிய கழிவுநீர் கால்வாயும் அமைய உள்ளது.

மேம்பாலம் அமைய உள்ள கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை முக்கியமான 5 இடங்களில் சுரங்க நடைபாதை அமைய உள்ளது.

3 இடங்களில் சிறுபாலங்களை அகலப்படுத்துதல், 3 இடங்களில் பாலங்களை திரும்ப கட்டுதல் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.2024 ஆகஸ்டு மாதத்துக்குள் பணிகளை முடிக்கும் விதமாக அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News