தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு சிறப்பு மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 4.5 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு- மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினர் செயலர் பேட்டி
- இந்த ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில ஆர்ஜீத வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
- நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில ஆர்ஜீத வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 204 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
நெல்லை:
இந்த ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில ஆர்ஜீத வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
204 வழக்குகளில் விசாரணை
நெல்லை மாவட்டத்தில் நெல்லை உட்பட 4 தாலுகாக்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களால் மொத்தம் 5 அமர்வுகளுடன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய சீனிவாசன் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலர் மற்றும் மாவட்ட நீதிபதியுமாகிய நசீர் அகமது முன்னிலையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில ஆர்ஜீத வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 204 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி திருமகள், குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி குமரேசன், மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மனோஜ்குமார், முதன்மை சார்பு நீதிபதி அமிர்தவேலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன்ராம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வின் செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய இசக்கியப்பன், முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்தானம், 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி வள்ளியம்மாள், நீதித்துறை நடுவர்கள் திருவெனி, ஆறுமுகம், விஜய்ராஜ்குமார், பாக்கியராஜ், கவிபிரியா, அருண்குமார் மற்றும் முரளிநாதன், நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் காமராஜ், வக்கீல்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் முகம்மது இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நில ஆர்ஜிதம் உள்ளிட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் 204 வழக்குகள் தீர்வு காணும் வகையில் எடுத்துக்கொள்ளப்பட்டு சமரசம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் அக்டோபர் 2019-ம் ஆண்டு பழனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் வன காவலர் ஜெயலட்சுமி உயிரிழந்த வழக்கு தொடர்பாக காப்பீட்டு நிறுவனத்திற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே நடைபெற்ற சமரச தீர்வில் ரூ.37 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புகை அளிக்கப்பட்டு அதற்கான காசோலை சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நசீர் அகமது தலைமையில் வழங்கப்பட்டது. இதே போல் மற்றொரு விபத்தில் படுகாயம் அடைந்த நபருக்கு ரூ.5 லட்சம் ரொக்க பணமும் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டது.
மொத்தமாக இன்றைய தினம் 2 விபத்துகளில் தொடர்புடைய வழக்குகளுக்கு சமரசம் செய்யப்பட்டு ரூ.42 லட்சம் இழப்பீடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினர் செயலர் நசீர் அகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் நில ஆர்ஜித வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கான சமரச தீர்வு மையம் மூலம் 150 சிறப்பு நீதிமன்றம் இன்றைய தினம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 11,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழகம் முழுவதும் எடுத்துக் கொள்ளப்பட்டு சமரசம் காணும் முயற்சி நடைபெறுகிறது.
சாலை விபத்து, நில ஆர்ஜிதம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 204 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு சாலை விபத்து தொடர்பான இரு வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.42 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை சிறப்பு நீதிமன்றம் மூலம் 4.5 லட்சம் வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.100 கோடிக்கு மேல் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.