உள்ளூர் செய்திகள்

5 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து வன்கொடுமை -புகார் மனு

Published On 2023-07-11 08:00 GMT   |   Update On 2023-07-11 08:00 GMT
  • 5 குடும்பங்களை மட்டும் சேர்க்காமல் எங்களிடம் வரியும் வாங்காமல் உங்களை இந்த ஊரில் இருந்து தள்ளி வைத்து விட்டோம் என்று பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவருடன் 20 நபர்கள் சேர்ந்து கூறினர்.
  • அப்படி கட்டவில்லை என்றால் உங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறோம் என மிரட்டல் விடுத்து எங்களை திருவிழாவில் கலந்து கொள்ள விடாமல் செய்துவிட்டனர்.

தருமபுரி,  

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுக்கா ஜெல்மாரம்பட்டியில் 5 குடும்பங்களை சேர்ந்த மாதப்பன், பச்சமுத்து, முனியப்பன் மணிவண்ணன், சம்பத், ஆகியோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் எங்கள் குடும்பத்துடன் ஜெல்மாரம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறோம். அனைவரும் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இந்த நிலையில் கடந்த 29.5.2023 லவ் இருந்து 31.5.2023 வரை எங்கள் ஊரில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது.

அந்த திருவிழாவில் மேற்கண்ட எங்கள் 5 குடும்பங்களை மட்டும் சேர்க்காமல் எங்களிடம் வரியும் வாங்காமல் உங்களை இந்த ஊரில் இருந்து தள்ளி வைத்து விட்டோம் என்று பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவருடன் 20 நபர்கள் சேர்ந்து கூறினர்.

இதனால் எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழாவில் எங்கள் 5 குடும்பங்களும் கலந்து கொள்ளாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். இதுவரை ஊரில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட முடியவில்லை. திருவிழாவின் கடைசி நாள் அன்று இரவு நிகழ்ச்சிக்கு சென்ற எங்களை பஞ்சாயத்து தலைவரின் ஆட்கள் சிலர் மது போதையில் அடித்து உதைத்து துன்புறுத்தினர்.

20 குடும்பங்கள் பயன்படுத்தும் சி.சி. ரோடை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர். அதை தட்டிக் கேட்டதற்காக எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகவும், அதனால் நீங்கள் அனைவரும் அபராதமாக 40,000 ரூபாய் கிராமத்திற்கு கட்ட வேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர்.

அப்படி கட்டவில்லை என்றால் உங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறோம் என மிரட்டல் விடுத்து எங்களை திருவிழாவில் கலந்து கொள்ள விடாமல் செய்துவிட்டனர்.

இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மேற்கண்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் ஊரில் அமைதியையும் சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையில் இனி வரும் காலங்களில் நாங்கள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் பரம்பரையாக ஒன்றாக கூடி திருவிழாவில் கலந்து கொள்ள எங்களுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News