திண்டுக்கல்லில் இருந்து பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்ப இருந்த பிளாஸ்டிக் பறிமுதல்
- நாடு முழுவதும் ஜூலை 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- திண்டுக்கல்லில் இருந்து புதுக்கோட்டைக்கு கடத்தப்பட இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 5 டன் பிளாஸ்டிக் பைகள் மற்றும் 60ஆயிரம் பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்:
நாடு முழுவதும் ஜூலை 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதனை பயன்படுத்தி வரும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட காந்திமார்க்கெட் பின்புறம் தனியார் பார்சல் சர்வீசில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மாநகர் நல அலுவலர் இந்திரா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளர்கள் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது திண்டுக்கல்லில் இருந்து புதுக்கோட்டைக்கு கடத்தப்பட இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 5 டன் பிளாஸ்டிக் பைகள் மற்றும் 60ஆயிரம் பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், ரங்கராஜ், முருகையா ஆகியோர் பறிமுதல் செய்தனர்.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, அதனை பயன்படுத்தினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.