50 கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்கம்: தெற்கு ரெயில்வே தகவல்
- இந்த ரெயில்கள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றது.
- மொத்தம் 526 சேவை இதன்மூலம் வழங்கப்படும்.
கோடைகால விடுமுறையில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோடைகாலத்தை முன்னிட்டு ரெயில்கள் மூலம் சுற்றுலா தலங்கள் மற்றும் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகளின் வசதிக்காக 50 சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரெயில்கள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றது. அதன்படி, தாம்பரம்-திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை, சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் வேளங்கண்ணி, திருவனந்தபுரம்-மங்களூரு, கொச்சுவேலி-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், தெற்கு ரெயில்வேயில் உள்ள பல்வேறு இடங்களுக்கு 37 கோடைகால சிறப்பு ரெயில்களை இயக்க மற்ற ரெயில்வே மண்டலங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. மொத்தம் 526 சேவை இதன்மூலம் வழங்கப்படும். இதுதவிர, ஊட்டி மற்றும் குன்னூருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருதி நீலகிரி மலை ரெயிலில் கோடைகால (முன்பதிவு) சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரெயில்கள் மட்டுமின்றி, வழக்கமான ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலை குறைக்கும் விதமாக கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.