உள்ளூர் செய்திகள்

பாளையில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களை படத்தில் காணலாம்.

நெல்லை மாவட்டத்தில் 230 மையங்களில் குரூப்-4 தேர்வை 50,151 பேர் எழுதினர்- விண்ணப்பித்தவர்களில் 10,935 பேர் 'ஆப்சென்ட்'

Published On 2022-07-24 09:24 GMT   |   Update On 2022-07-24 09:24 GMT
  • தமிழகம் முழுவதும் குரூப்-4 பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக இன்று தேர்வு நடைபெற்றது.
  • நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்கு 61, 086 பேர் விண்ணப்பத்திருந்தனர்.

நெல்லை:

தமிழகம் முழுவதும் குரூப்-4 பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக இன்று தேர்வு நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்கு 61, 086 பேர் விண்ணப்பத்திருந்தனர். மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களிலும் 191 இடங்களில் மொத்தம் 230 மையங்களில் இன்று தேர்வு நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 தாலுகாக்களில் 223 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்காக 63,388 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் அமைக்கப்பட்டு இருந்த 237 மையங்களில் 59,700 பேருக்கு தேர்வெழுத அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த 3 மாவட்டங்களிலும் மொத்தம் 690 மையங்களில் நடந்த தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒவ்வொரு மையத்தில் தேர்வர்களை கண்காணிப்பதற்கு முதன்மை கண்கா–ணிப்பாளர்கள், கண்கா–ணிப்பாளர்கள், நடமாடும் குழுக்கள், வீடியோ பதிவாளர்கள் உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

தேர்வு முறைகேடுகளை தடுப்பதற்காக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக தேர்வெண் மட்டுமே இருக்கைகளில் ஒட்டப்படும் நிலையில் தற்போது தேர்வர்களின் புகைப்படமும் ஒட்டப்பட்டு இருந்தது.

தேர்வர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். மையங்களுக்குள் செல்போன்கள், மின்னணு சாதனங்கள், கை கடிகாரம், புத்தகங்கள், குறிப்புகள் உள்ளிட்டவை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. காலை 8.30 மணி முதல் தேர்வர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பாளையில் உள்ள ஒரு மையத்தில் நடந்த தேர்வினை கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டார். இதேபோல் தென்காசி மாவட்டத்தில் கலெக்டர் ஆகாஷ், தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.

இதனையொட்டி மாவட்டம் முழுவதும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. நெல்லை மாநகர பகுதியில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு மையங்கள் வழியாக வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக சில பஸ்களும் இயக்கப்பட்டன.

நெல்லை மாவட்டத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 50,151 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 10,935 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதனால் மொத்தத்தில் விண்ணப்பித்தவர்களில் 82 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர்.

Tags:    

Similar News