உள்ளூர் செய்திகள்

கூடங்குளத்தில் 60 பவுன் நகை திருட்டு: அணுமின் நிலைய அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார்? - சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை

Published On 2022-09-19 09:41 GMT   |   Update On 2022-09-19 09:41 GMT
  • நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய அசோகன்(வயது 55) அங்குள்ள அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
  • அங்குள்ள நுழைவு வாயில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் உள்ளே வந்துள்ளனரா? என்று பார்த்து வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய அசோகன்(வயது 55) அங்குள்ள அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கடந்த 1-ந்தேதி அசோகன் கர்நாடகா மாநிலம் கைகா அணுமின் நிலையத்திற்கு பணி மாறுதலாகி சென்றார். இதனால் அவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் கர்நாடகா மாநிலம் சென்றுவிட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து சுமார் 60 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இதுதொடர்பாக கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அங்குள்ள நுழைவு வாயில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் உள்ளே வந்துள்ளனரா? என்று பார்த்து வருகின்றனர்.

சம்பவம் நடந்த குடியிருப்புக்கு வெளி நபர்கள் யாரும் அவ்வளவு எளிதாக உள்ளே வர முடியாது. பாதுகாப்புக்கு ஊழியர்கள் அதிகமாக இருக்கும் நிலையில் குடியிருப்பில் உள்ளேயே வசிக்கும் எந்த குடும்பத்தினராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த குடியிருப்புகளில் வசித்து வருபவர்களின் கைரேகை மாதிரிகளை எடுத்து கைரேகை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News