63 நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கல்
- 63 நாட்டுப்புற கலைஞா்களுக்கு தலா ரூ. 10,000 வீதம் காசோலை வழங்கப்பட்டுள்ளது.
- குடும்ப பராமரிப்பு நிதியுதவி 5 பேருக்கு ரூ. 25,000 வீதம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டுத் துறை சாா்பில் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு இசைக் கருவிகள், ஆடை அணிகலன்கள் வாங்குவதற்கான நிதியுதவி மற்றும் மறைந்த கலைஞா்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவித் தொகைக்கான காசோலைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
விழாவில் நாட்டுபுற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத் தலைவா் வாகை சந்திரசேகா் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது :-
நலிந்த நிலையில் வாழும் கலைஞா்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி ரூ. 3,000 வழங்குதல், புகழ்பெற்ற மறைந்த கலைஞா்களின் குடும்பங்களுக்கு குடும்ப பராமரிப்பு நிதியுதவி தற்போது ரூ. 25,000 வழங்குதல், நாட்டுப்புறக் கலைஞா்களுக்கும், கலைக்குழுக்களுக்கும் இசைக்கருவிகள், ஆடை அணிகலன்கள் வாங்க ரூ. 10,000 வீதம் 500 கலைஞா்களுக்கு வழங்கப்படுகிறது.
இதன்படி, தஞ்சாவூா் மண்டலத்தில் (தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள்) நலிந்த நிலையில் வாழும் 63 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு தலா ரூ. 10,000 வீதம் காசோலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப பராமரிப்பு நிதியுதவி 5 பேருக்கு ரூ. 25,000 வீதம் வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் நீலமேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.