உள்ளூர் செய்திகள்

சிறை தண்டனை பெற்றவர்கள்.

முன்விரோதத்தில் 3 பேரை தாக்கிய வழக்கில் 7 பேருக்கு சிறை

Published On 2022-10-01 08:08 GMT   |   Update On 2022-10-01 08:08 GMT
  • உள்ளாட்சி தேர்தலின்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.
  • 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கருவாழக்கரை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவரது எதிர் வீட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற ராஜசேகர் (34).

இவர்கள் இருவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.

இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு கணேசன் மற்றும் அவரது உறவினர்கள் அமிர்தம், லட்சுமி ஆகியோர் அங்கு நின்று கொண்டிருந்தபோது் ராஜசேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெங்கடேசன் (33), வெங்கடேஷ் (33), மணி (38), முனி என்கிற மணிகண்டன் (27), விஜி என்கிற விஜய் (27), விக்னேஷ் (28) ஆகிய 7 பேரும் சேர்ந்து கணேசன், அமிர்தம், லட்சுமி ஆகிய 3 பேரையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

மேலும் கணேசன் வீட்டில் இருந்த நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று மாவட்ட கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இளங்கோ தீர்ப்பு வழங்கினார்.

ராஜசேகர், வெங்கடேசன், வெங்கடேஷ், மணி, விஜய், விக்னேஷ் ஆகிய 6 பேருக்கும் 4 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், மணிகண்டனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

அபராத தொகையை கட்டத்தவறினால் தலா 2 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News