தன்னிச்சையாக செயல்படுகிறார் ஊராட்சி தலைவர் மீது 8 உறுப்பினர்கள் பரபரப்பு புகார்
- வீரக்கல் ஊராட்சி தலைவர் மீது 8 உறுப்பினர்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
- நேரடியாக வைத்து விசாரணை நடத்துவதாக கூறியதை யடுத்து வார்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், வீரக்கல் ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேஸ்வரி தங்கவேல், துணைத் தலைவராக இருப்பவர் யூசின்ராஜா ஆகியோர் வார்டு உறுப்பினர்களை மதிப்பதில்லை.
தலைவரும், துணைத் தலைவரும் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர். பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி வார்டு உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும், வரவு செலவு கணக்குகளை முறையாக காண்பிப்பது இல்லை என்றும் தொடர்ந்து உறுப்பினர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
மேலும் தனிநபர் கழிப்பறை திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை என்பது உட்பட பல்வேறு புகார்களை கூறி வேல்வள்ளி, அம்சவள்ளி, ராமசந்திரன், ரேணுகாமேரி, தீபா, நாகலட்சுமி, மதன்குமார், மூர்த்தி உட்பட 8 வார்டு உறுப்பினர்கள் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலையானிடம் புகார் மனு கொடுத்தனர்.
ஊராட்சி நிர்வாகம் முறையாக செயல்பட வேண்டும். எந்தப் பணியைச் செய்தாலும் வார்டு உறுப்பினர்களை கலந்து ஆலோசித்த பின்னரே செய்ய வேண்டும் என அதிகாரியிடம் தெரிவித்தனர். வார்டு உறுப்பினர்களின் புகார் மனுக்களை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலையான் ஒரு வார காலத்தில் வீரக்கல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதில் வார்டு உறுப்பினர்களை நேரடியாக வைத்து விசாரணை நடத்துவதாக கூறியதையடுத்து வார்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.